search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் சென்னை பசுமை வழி சாலை"

    திருவண்ணாமலையில் பசுமை சாலைக்கு ஆர்டர் போட்ட ஆட்சியாளர்களை கடித்து தின்று விடுவேன் என்று தலைவிரி கோலத்துடன் சாமியாடிய பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் பசுமை சாலை போடுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பெரணமல்லூர் அருகே அரியப்பாடியில் நிலத்தினை அளவிடும்போது ஜி.பி.எஸ். கருவியுடன் வந்த அதிகாரிகளை இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு பணியை தடுத்தனர். டி.எஸ்.பி. குணசேகரன் தலைமையிலான போலீசார், இளைஞர்களை விரட்டியடித்தனர்.

    மேலும், அதே கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சரஸ்வதி ஜி.பி.எஸ். கருவியை பிடுங்கி அதிகாரிகளுடன் சண்டை போட்டார். அப்போது, விவசாயி அப்பு என்பவரின் மனைவி செந்தாமரை தனது நிலத்தில் அளவீடு கற்களை நட்டதும் ஆக்ரோ‌ஷமடைந்தார்.

    செந்தாமரை திடீரென தலைவிரி கோலத்துடன் அதிகாரிகள் மற்றும் போலீஸ் முன்பு சாமியாடினார். 8 வழி பசுமை சாலைக்கு ‘ஆர்டர்’ போட்டது யார்? அந்த ஆட்சியாளர்கள் இங்கு வந்தால்... அவர்களை கடித்து தின்று விடுவேன் என்று பற்களை நரநரவென கடித்து தனது நிலத்திலேயே படுத்து உருண்டு புரண்டார்.

    இதனால், பதறிபோன அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு திகைப்புடன் சாமியாடிய அந்த பெண்ணை வேடிக்கை பார்த்து நின்றனர். அப்போது அங்கு வந்த சில வாலிபர்கள், தங்கள் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த அளவீடு கற்களை பிடுங்கி வீசினர்.

    போலீசார் அவர்களை தடுத்து எச்சரித்தனர். அதற்கு வாலிபர்கள், எங்களுக்கு சோறு போடும் நிலம் தான் வேண்டும். கை பிடி அளவு என்றாலும்... எங்கள் உயிர். அதனை பறிக்க அரசியல் சாசனப்படி உங்களுக்கு அதிகாரம் இல்லை.

    விவசாயிகளை மிரட்டி அடி பணிய வைப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லி விட்டு. ஆட்சியாளர்களே விவசாயத்தை அழித்து, 8 வழிச்சாலை போடுவது? விவசாயத்தை பாதுக்கும் நடவடிக்கையா?

    பசுமை சாலை எங்களுக்கு வேண்டாம். இருக்கும் சாலையே குண்டும் குழியுமாக இருக்கிறது. அதனை சரி செய்தாலே போதும். யாரே ஒரு சதவீத பணக்காரர்களுக்காக பசுமை சாலை போடப்படுகிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகளும், போலீசார், கலெக்டரை சந்தித்து முறையிடுங்கள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடர்ந்தனர்.

    வந்தவாசி தாலுகா நம்பேடு ஊராட்சிக்குட்பட்ட நம்பேடு, ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 60 பாசன கிணறுகள், ஏரி அழிக்கப்படுகிறது. இதனால் அந்த ஊரே பாலை வனமாக மாற கூடிய அபாய கட்டத்தை எட்டும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மேலும், அதே பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண் விவசாயியின் 2 ஏக்கர் நிலம், பம்புசெட்டு கிணறு பறி போகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுமதி, தன்னை கொன்று புதைத்து விட்டு அதன் மீது ரோடு போட்டு கொள்ளுங்கள் என்று கதறி அழுதார்.

    செய்யாறு கோட்டகரம் கிராமத்தில் ஏரியை அளவீடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஏரியை அழித்தால் சுமார் 200 ஏக்கர் விளை நிலம் எங்கள் பகுதியில் அழிந்து விடும் என்று கண்ணீர், கதறலுடன் மன்றாடினர்.

    இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. #Tamilnews
    8 வழி சாலைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் ஜெயிலில் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிப்பு தெரிவித்து காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    அப்போது 8 வழி பசுமை சாலையை எதிர்த்து அரசுக்கு எதிராக 8 வழி சாலையை அமைத்தால் 8 பேரை வெட்டி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வேன் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகானையும், பியூஷ் மானுஷையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பின்னர் மன்சூர் அலிகானும், பியூஷ் மானுசும் ஜாமீன் கேட்டு ஓமலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரமேஷ் விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிப்பாடி விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் மன்சூர் அலிகான் பேசிய ஆடியோ பதிவை போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி ரமேஷ் நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    பியூஷ் மானுஷ் ஓமலூர் கோர்ட்டில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சேலம்-சென்னைக்கு 8 வழி பசுமை சாலை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கூறி நடிகர் மன்சூர் அலிகான் சேலம் ஜெயிலில் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    காலை உணவை அவர் சாப்பிட மறுத்ததால் ஜெயில் அதிகாரிகள் அவரிடம் சமாதானம் செய்து வருகிறார்கள். இதனால் சேலம் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×