search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - 3 விதமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு
    X

    8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - 3 விதமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு

    8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து பொதுவாக 3 விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad
    சென்னை:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 37 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு தடை விதித்தனர். தமிழக அரசின் அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த திட்டத்துக்காக மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியதும் செல்லாது என்று அறிவித்தனர்.

    மேலும் யாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களுக்கே அந்த நிலத்தை 8 வாரத்துக்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது.

    பொதுவாக 3 விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    முதலில் 8 வழி பசுமை சாலைத்திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற 37 மனுதாரர்களும் சுப்ரீம் கோர்ட்டில் “ஹேவியட்” மனு தாக்கல் செய்யலாம். 8 வழி சாலை திட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதேனும் பிறப்பிப்பதாக இருந்தால் அதற்கு முன்பு தங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று 37 மனுதாரர்களும் கோரிக்கை விடுக்கலாம்.

    இரண்டாவதாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமோ அல்லது மத்திய சாலை போக்குவரத்து துறையோ சென்னை ஐகோர்ட்டின் ரத்து உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பு உள்ளது.

    மூன்றாவதாக இந்த திட்டத்துக்கு மத்திய அரசு உரிய விதிமுறைப்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்று, புதிய அறிவிப்பினை வெளியிட்டு திட்டத்தை தொடங்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. இதை மத்திய அரசு கையில் எடுக்க வாய்ப்பு உள்ளது.

    அதன்படி பொதுமக்களிடம் கருத்து கேட்டு மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க மத்திய அரசு முயற்சி செய்யும். இந்த 3 விதமான நடவடிக்கைகளே அடுத்தகட்ட நடவடிக்கையாக அமையும். #SalemChennaiGreenCorridor #8LaneRoad

    Next Story
    ×