செய்திகள்

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம்- வீரமரணம் அடையும் போலீசாரின் வாரிசுகளுக்கும் நீட்டிப்பு

Published On 2019-05-31 13:39 GMT   |   Update On 2019-05-31 13:39 GMT
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் வீரமரணம் அடையும் போலீசாரின் வாரிசுகளுக்கும் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கடமையின்போது வீரமரணம் அடையும் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் துணை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து பிரதமரின் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்ற புதிய மந்திரிசபையின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில்  இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் பங்கேற்றனர்.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவாக பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் பணியின்போது வீரமரணம் அடையும் அனைத்து மாநிலங்களின் போலீசாரின் வாரிசுகளுக்கும் விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

நக்சலைட்கள், மாவோயிஸ்ட்டுகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் வீரமரணம் அடையும் போலீசாரின் வாரிசுகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

மேலும், இந்த திட்டத்தின்கீழ் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மாதாந்திர உதவித்தொகையை இரண்டாயிரத்தில் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாகவும், மாணவிகளுக்கான உதவித்தொகையை இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதில் இருந்து மூவாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தமுறை பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அவரது தலைமையிலான மத்திய அரசின் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News