செய்திகள்

கர்நாடகத்தில் நீட் தேர்வை தவறவிட்ட சுமார் 600 பேருக்கு 20-ம் தேதி மறுவாய்ப்பு - பிரகாஷ் ஜவடேகர்

Published On 2019-05-06 13:41 GMT   |   Update On 2019-05-06 13:41 GMT
பானி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 20-ம் தேதி நடைபெறும். கர்நாடகத்தில் ரெயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட சுமார் 600 பேருக்கு அன்று மறுவாய்ப்பு அளிக்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #Karnatakastudents #NEETstudents #PrakashJavadekar
புதுடெல்லி:

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதற்காக கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, தார்வார், பெலகாவி, தாவணகெரே, மங்களூரு, உடுப்பி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பெங்களூருவில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்காக பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 600 மாணவ–மாணவிகள் பல்லாரி நகரில் இருந்து ஹம்பி ரெயிலில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புறப்படவேண்டிய அந்த ரெயில் 4 மணி நேரம் தாமதமாக இரவு 2 மணிக்குத்தான் அங்கிருந்து கிளம்பியது. இருப்பினும் அந்த ரெயிலில் மாணவ-மாணவிகள் பயணித்தனர்.

அந்த ரெயில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது சிக்னல் கிடைக்காமல் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகுதான் ரெயில் அங்கிருந்து கிளம்பியது.

நேற்று மதியம் ஒரு மணியளவில்தான் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள், ரெயிலில் இருந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ரெயிலை சிறைபிடித்து என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாணவ–மாணவிகளும் அவர்களுடன் வந்த பெற்றோரும் பின்னர் அங்கிருந்து பஸ்கள், கார்கள் மூலம் அவசர, அவசரமாக பெங்களூருவுக்கு வந்தனர். இருப்பினும் அவர்களால் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடியவில்லை. இதன் காரணமாக மாணவ-மாணவிகளால் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள் தேம்பி, தேம்பி கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் சோகத்துடன் பெங்களூருவில் இருந்து தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் தேர்வு எழுத முடியாத சில மாணவ-மாணவிகள் தங்களுடைய நிலை குறித்து, மத்திய ரெயில்வே அமைச்சருக்கு டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும், தாங்கள் மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூருவுக்கு ரெயில் தாமதமாக வந்ததால் 600 மாணவ–மாணவிகள் நேற்று ‘நீட்’ தேர்வு எழுத முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக  முதல் மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேபோல் முன்னாள் முதல் மந்திரி சித்த ராமையாவும் தனது டுவிட்டர் பக்கம் மூலம் பிரதமரை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், பானி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 20-ம் தேதி நடைபெறும். கர்நாடகத்தில் ரெயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட சுமார் 600 பேருக்கு அதே நாளில் மறுவாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய மனித வளத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்துள்ளார். #Karnatakastudents #NEETstudents #PrakashJavadekar
Tags:    

Similar News