உள்ளூர் செய்திகள்

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை

Published On 2024-05-01 05:00 GMT   |   Update On 2024-05-01 05:00 GMT
TNL04010524: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது. இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது.

இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அதே நேரத்தில் கொளுத்திய கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடி யில் 29 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தென்காசியில் 16.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்த வரை கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயரும் அளவிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றாலும், மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது.

85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் கோடை வெயிலால் வேகமாக குறைந்து வருகிறது. அந்த அணையில் தற்போது 27.40 அடி நீர் மட்டுமே இருக்கிறது.

ராமநதி அணையின் நீர் மட்டம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது 84 அடி கொண்ட அந்த அணையில் 41.50 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும் 72.10 அடி கொண்ட கருப்பாநதியில் 39.37 அடி நீர் இருப்பும், மிகச்சிறிய அணையான குண்டாறு அணையின் நீர் இருப்பு 15.250 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News