செய்திகள்

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2019-04-22 13:44 GMT   |   Update On 2019-04-22 13:44 GMT
சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #Jayalalithaamemorial
புதுடெல்லி:

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட கூடாது. மக்களின் வரிப்பணத்தை தமிழக அரசு இதற்காக செலவிட கூடாது என்று முன்னர் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு 23-1-2019 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிப்பதற்கு முன்னதாகவே அவர் இறந்து விட்டார் என்பதால் மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சின் கன்னா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

'இவ்வழக்கின் மனுதாரர் நேரில் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தின்படியும் அவர் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையிலும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. அவற்றின்படி இவ்விவகாரத்தில் முன்னர் சென்னை ஐகோர்ட் அளித்த உத்தரவில் நாங்கள் தலையீடு செய்ய விரும்பவில்லை. எனவே, இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.



இதே விவகாரத்தை முன்வைத்து இந்த நீதிமன்றத்தில் வேறேதும் முறையீடுகள் இருந்தாலும் அவையும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவே கருதப்படும்’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். #SCrejectsplea #Jayalalithaamemorial 
Tags:    

Similar News