செய்திகள்

பயங்கரவாதிகள் தாக்குதலை இனியும் பொறுக்க முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை

Published On 2019-03-10 08:42 GMT   |   Update On 2019-03-10 08:42 GMT
பயங்கரவாதிகள் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PMModi

காசியாபாத்:

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50-வது ஆண்டு தொடக்க விழா உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது புல்வாமா மற்றும் உரியில் நடந்த தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய அவர் பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரும் பகை உணர்வு கொண்ட அண்டை நாட்டை (பாகிஸ்தானை) எதிர் கொள்வதில் மத்திய தொழில் பாதுகாப்பு படைகள் போன்றவைகளின் பங்கு மிக முக்கியமானது. அண்டை நாடு பெரும் பகை உணர்வுடன் இருந்தாலும், அவர்களால் நம்முடன் போரிடும் திறன் இல்லை.

எனவே, எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சதி செயலில் ஈடுபடுகின்றனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போன்ற நிறுவனங்கள் முக்கிய சவால்களை சந்திக்கின்றன.

புல்வாமா மற்றும் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர். இதுபோதும் என கருதுகிறேன். காலம் உள்ளவரை எங்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாடு எப்போதும் கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருக்காது என பயங்கரவாதிகளை கடுமையாக எச்சரிக்கிறேன்.

வி.ஐ.பி. கலாசாரம் சில நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு முறையில் தடையை ஏற்படுத்துகின்றன. எனவே அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒரு தனிப்பட்ட நபரை பாதுகாப்பது எளிது, ஆனால் எந்த ஒரு நிறுவனத்தையும் பாதுகாப்பது மிகவும் கடினம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News