செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை தாக்கினோம் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Published On 2019-03-05 20:37 GMT   |   Update On 2019-03-05 20:37 GMT
புலவாமா தாக்குதலுக்கு பதிலடியாகத் தான் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களுக்குள் நுழைந்து தாக்கினோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #PulwamaAttack #Pakistan #PMModi
தார்:

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

காஷ்மீர் புலவாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகத் தான் இந்தியா பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்துக்குள் நுழைந்து தாக்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியும்.

பாகிஸ்தானில் வான் தாக்குதல் நடைபெற்றது. ஆனால் இந்தியாவில் உள்ள சிலரின் பேச்சுகள் வலியை தருவதாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் நாம் சரியான நடவடிக்கை எடுத்ததாக கூறுகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர்களின் சக மனிதர்கள் போல செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நபர்கள் பாகிஸ்தானின் தபால் பையன்கள் போல செயல்பட்டு அமைதிக்கான தூதுவர் என்று கூறிக்கொள்கிறார்கள். இந்திய விமானப்படை வான் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டு, ஆயுதப்படைகளின் துணிச்சலை இழிவுபடுத்துவதுடன், நாட்டு மக்களையும் திசைதிருப்புகிறார்கள்.

காங்கிரஸ் கடவுள் (ராகுல் காந்தி) குடும்பத்துக்கு நெருங்கிய தலைவர் ஒருவர் (திக்விஜய்சிங்), புலவாமா தாக்குதல் ஒரு விபத்து என்று சொல்கிறார். அவர் ஒசாமா பின்லேடனையும் அமைதிக்கான தூதுவர் என்பார். அதே நபர் தான் மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்று கூறி விசாரணையை திசைதிருப்ப முயன்றார்.

மற்றொரு தலைவர் பயங்கர வாதிகள் சாவுக்கு கண்ணீர் சிந்துகிறார். அவர்கள் பயங்கரவாதிகளை அழிப்பதை ஏற்றுக்கொள்ள வில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றபோது அமைதியாக உட்கார்ந்து இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News