செய்திகள்

மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியா?: நடிகை சுமலதா அம்பரீஷ் பேட்டி

Published On 2019-03-05 03:13 GMT   |   Update On 2019-03-05 03:13 GMT
மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியா? என்ற கேள்விக்கு இன்னும் 4 நாட்களில் முடிவை அறிவிப்பேன் என்று நடிகை சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார். #SumalathaAmbareesh #MandyaConstituency
மண்டியா :

மண்டியா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா விருப்பம் தெரிவித்துள்ளார். அதுவும் தனது கணவர் அங்கம் வகித்த காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அக்கட்சி தலைவர்களிடம் கூறியிருந்தார். ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது.

மேலும் மண்டியா பாராளுமன்ற தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில்கவுடாவை நிறுத்த ஜனதாதளம்(எஸ்) முடிவு செய்துள்ளது. இதனால் மண்டியா தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க அக்கட்சி மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா அம்பரீஷ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவாரா? அல்லது தனித்து போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே வேளையில் அவரை பா.ஜனதா சார்பில் போட்டியிட வைக்கவும் அக்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரஸ் கட்சி நடிகை சுமலதா அம்பரீசிடம் மண்டியாவில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதாகவோ அல்லது கொடுக்க முடியாது என்றோ இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால் அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் மண்டியா மாவட்டத்தில் நடிகை சுமலதா அம்பரீஷ், தனது மகன் அபிஷேக்குடன் தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

நேற்று மத்தூரில் ஆதரவு திரட்டிய நடிகை சுமலதா அம்பரீசிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:-

மண்டியா தொகுதியில் போட்டியிடுவது பற்றி வேறு கட்சிகளுடன் ஆலோசிக்கவில்லை. நான் மண்டியா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். சுயேச்சையாக போட்டியிடுவேனா? அல்லது ஏதாவது ஒரு கட்சி சார்பில் போட்டியிடுவேனா? என்பது இப்போது கூற முடியாது. நான் எனது ஆதரவாளர்களுடன் பேசி இன்னும் 3 அல்லது 4 நாட்களில் எனது முடிவை அறிவிப்பேன்.

நான் பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டுள்ளேன். நான் மேல்-சபை உறுப்பினர் பதவியோ அல்லது பிற பதவிகளையோ விரும்பவில்லை. நான் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியோ அல்லது தோல்வியையோ சந்திக்கவே விரும்புகிறேன். நான் நேரடியாக தேர்தல் களத்தில் போட்டியிடவே முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #SumalathaAmbareesh #MandyaConstituency 
Tags:    

Similar News