செய்திகள்

கட்சியில் சேர்ந்தால் மட்டுமே ஆதரிப்போம் - நடிகர் பிரகாஷ்ராஜுக்கு காங்கிரஸ் ஆதரவு தர மறுப்பு

Published On 2019-02-20 05:57 GMT   |   Update On 2019-02-20 05:57 GMT
எங்கள் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. #ParliamentElection #Congress #PrakashRaj
பெங்களூரு:

பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின் நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த படுகொலைக்கு பா.ஜனதா தான் காரணம் என்று குற்றம் சாட்டி வந்தார்.

பிரகாஷ் ராஜின் அரசியல் ஆர்வத்தை பார்த்த அரசியல் கட்சிகள் அவரை தங்கள் கட்சிகளுக்கு வர சொல்லி அழைப்பு விடுத்தன. அந்த அழைப்புகளை நிராகரித்த அவர் சுயேட்சையாக பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இதற்கான பிரசாரத்தையும் அவர் தொடங்கினார். சுயேட்சையாக போட்டியிடும் தனக்கு மதசார்பற்ற கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் காங்கிரஸ் அவரது கோரிக்கையை நிராகரித்து ஆதரவு தர மறுத்துவிட்டது.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-



கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்தோம். பிரகாஷ்ராஜ் தனக்கு ஆதரவு வழங்குமாறு சித்தராமையா மற்றும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எங்களது கட்சி தேசிய கட்சி. காங்கிரசில் சேர்ந்தால் மட்டுமே பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு வழங்கப்படும். இதை எங்கள் கட்சியின் மேலிடம் கூறி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரகாஷ் ராஜ் போட்டியிடும் தொகுதியில் கடந்த 2009 மற்றும் 2014 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். ஆனால் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பி.சி.மோகன் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரிஜ்வான் ஹர்‌ஷத் தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் முயற்சி செய்து வருகிறார். முன்னாள் எம்பி.யும், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.யுமான எச்.டி.சாங்கிலியானா, முன்னாள் எம்.எல்.ஏ. பிரியா கிருஷ்ணா ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். #ParliamentElection #Congress #PrakashRaj

Tags:    

Similar News