செய்திகள்

இந்தியாவில் 16 கோடி பேர் மது குடிக்கிறார்கள் - மத்திய அரசின் ஆய்வு சொல்கிறது

Published On 2019-02-19 00:59 GMT   |   Update On 2019-02-19 00:59 GMT
இந்திய அளவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் மது குடிப்பதாக மத்திய அரசின் ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையத்துடன் இணைந்து ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் போதை பொருள்கள் மற்றும் நோய் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் 36 மாநிலங்களிலும் 186 மாவட்டங்களில் 4.73 லட்சம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-

இந்திய அளவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் (14.6 சதவீதம்) மது குடிக்கிறார்கள். இதன்காரணமாக சத்தீ‌ஷ்கார், திரிபுரா, பஞ்சாப், அருணாசலபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மதுகுடிப்பவர்கள் 38 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். 180 பேரில் ஒருவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார்.

மதுவுக்கு அடுத்த இடங்களில் கஞ்சாவும், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களும் உள்ளன. 2.8 சதவீதம் பேர் (3.1 கோடி) கஞ்சாவும், 1.14 சதவீதம் பேர் ஹெராயினும், 0.96 சதவீதம் பேர் மருந்து பொருட்களையும், 0.52 சதவீதம் பேர் ஓபியமும் போதைக்காக பயன்படுத்துகிறார்கள். 10 முதல் 75 வயது வரை உள்ள 1.18 கோடி பேர் (1.08 சதவீதம்) தூக்க மாத்திரை, மயக்க மருந்து போன்றவைகளை போதைக்காக பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Tags:    

Similar News