செய்திகள்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் - பிரியங்கா விருப்பம்

Published On 2019-02-14 21:48 GMT   |   Update On 2019-02-14 21:48 GMT
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #Priyanka #Congress #UttarPradesh
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தனது பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். லக்னோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் உத்தரபிரதேசத்தில் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அதற்கான காரணங்களை பட்டியலிட்டனர். மேலும் அங்குள்ள சிறிய கட்சியான மகான் தளத்துடனும் கூட்டணி வைக்கக்கூடாது என அவர்கள் பிரியங்காவிடம் தெரிவித்தனர்.

நிர்வாகிகளின் இந்த கருத்துக்களை அறிந்து கொண்ட பிரியங்காவும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைப்போல உத்தரபிரதேசத்தின் பதேப்பூர், லக்னோ, கோரக்பூர், வாரணாசி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரியங்கா போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்கா, தான் அவ்வாறு போட்டியிட்டால் பிற தொகுதிகள் மீதான கவனம் சிதறி விடும் என கூறியதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Priyanka #Congress #UttarPradesh

Tags:    

Similar News