செய்திகள்

விவசாயிகள் நிதி உதவி திட்டத்துக்கு ஆதார் எண் அவசியம் - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2019-02-04 22:12 GMT   |   Update On 2019-02-04 22:12 GMT
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. #AadhaarNumber #CentralGovernment #Farmer
புதுடெல்லி:

மத்திய பா.ஜனதா அரசு 1-ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமும் ஒன்று. 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிதி உதவி 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த திட்டம் குறித்து மத்திய அரசின் விவசாய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான முதல் தவணை மார்ச் மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முதல் தவணைக்கு மட்டும் ஆதார் எண் அவசியம் இல்லை. அதற்கு பதிலாக பயனாளிகளின் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொடுக்கலாம்.



ஆனால் அதே சமயம் 2-வது தவணை பெறும் போது ஆதார் எண் அவசியம் இருக்க வேண்டும். இது தொடர்பாக பயனாளிகளின் பெயர், நிலத்தின் அளவு, ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஆண்/பெண் போன்ற விவரங்களை மாநில அரசு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி 1-ந் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. எனவே அதற்கு பிறகு வேறு யார் பெயரிலாவது நிலம் மாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் இந்த திட்டத்துக்கு தகுதி பெற இயலாது.

இது தொடர்பாக மாநில அரசு குறைதீர்க்கும் முகாம் நடத்தி சரியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதி உடைய எந்த பயனாளிகளும் விடுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை கண்காணிக்க மத்திய அரசு ஒரு குழு அமைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News