செய்திகள்

பீகார் ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2019-02-03 06:16 GMT   |   Update On 2019-02-03 06:16 GMT
பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் பலி 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Modicondoles #TrainAccident #SeemanchalExpress
புதுடெல்லி:

பீகார் மாநிலம், ஜோக்பனி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் பகுதியை நோக்கிச் சென்ற சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மெஹ்னார் சாலையை கடந்தபோது, ஹதாய் பஜர்க் பகுதியருகே தடம்புரண்டது.

அந்த ரெயிலின் 11 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இன்று காலை 11 மணி நிலவரப்படி இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 20-க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், இந்த விபத்து பற்றிய செய்தியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ரெயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இன்றைய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். #PMModi #Modicondoles #TrainAccident #SeemanchalExpress
Tags:    

Similar News