செய்திகள்

மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை - சிவசேனா அறிவிப்பு

Published On 2019-01-23 07:28 GMT   |   Update On 2019-01-23 07:28 GMT
மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #ShivSena #PMModi #BJP
புதுடெல்லி:

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜனதாவையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.



இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைக்காது. நாங்கள் அந்த கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இல்லை. 2014 தேர்தல் போல் பா.ஜனதாவுடன் எங்கள் உறவு இல்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற வார்த்தை இனி எங்கள் அகராதியில் கிடையாது.

இந்த தேர்தலில் தொங்கு பாராளுமன்றம் தான் உருவாகும். அப்படி உருவானால் பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை முன்னிறுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாங்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம். மோடியை முன்னிறுத்தினால் நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிட போவதாக சிவசேனா அறிவித்தது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. 25 தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளது.

பா.ஜனதா அல்லாத சிறிய கட்சியுடன் கூட்டணி அமைத்து அந்த மாநிலத்தில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் சிவசேனாவை சமாதானப்படுத்த கூட்டணி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

சிவசேனாவின் நிறுவன தலைவரான பால்தாக்கரேக்கு நினைவு மண்டபம் கட்ட ரூ.100 கோடியை ஒதுக்கி மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. #ShivSena  #PMModi #BJP

Tags:    

Similar News