செய்திகள்

மாயாவதியை கேவலமாக விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

Published On 2019-01-20 12:44 GMT   |   Update On 2019-01-20 12:44 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல் மந்திரி மாயாவதியை தரம்தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. #Sadhanasingh #Mayawati #NCW
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுயமரியாதை பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது. மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார். 

இப்போது, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தனது சுயமரியாதையை விற்கத் துணிந்துவிட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை என்று விமர்சனம் செய்திருந்தார் சாதனா சிங். 

மேலும், மாயாவதியை பார்த்தால் ஆண் போலவும் தெரியாது, பெண் போலவும் தெரியாது. மூன்றாம் பாலினத்தவர் போல் இருப்பார் எனவும் தெரிவித்திருந்த அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



கடந்த 1995-ம் ஆண்டு லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில், சமாஜ்வாதி கட்சியினர் மாயாவதியை தாக்கி அவமரியாதை செய்தனர். ஆனால், இரு கட்சிகளும் தங்களின் முந்தைய பகையை மறந்து, வரும் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். 

இதற்கிடையே, மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய மகளிர் ஆணையம் தீர்மானித்துள்ளது.

'ஒரு கட்சியின் தலைவரை ஒரு பெண்ணை பற்றி மற்றொரு பெண் இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பது ஏற்க முடியாது, கண்டிக்கத்தக்கது. இதைதேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டுள்ளது. சாதனா சிங்குக்கு நாளை அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்’ என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.

கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருவதால், தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பாஜக எம்.எல்.ஏ. சாதனா சிங் இன்று மாலை குறிப்பிட்டுள்ளார்.  #Sadhanasingh #Mayawati #NCW
Tags:    

Similar News