செய்திகள்

சபரிமலை கோவிலுக்கு 51 பெண்கள் சென்றார்களா? - கேரள அரசின் தகவலால் மீண்டும் சர்ச்சை

Published On 2019-01-19 03:04 GMT   |   Update On 2019-01-19 03:04 GMT
சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimalatemple #SC
திருவனந்தபுரம்:

சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். கேரள அரசு இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை கோவிலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளது. இது கேரளாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, “இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சன்னிதானத்தை அடைந்தார்களா? வழிபட்டார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது” என்றார்.



சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், சபரிமலை கர்மா சமிதி, பந்தளம் அரண்மனை குடும்பம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. சுப்ரீம் கோர்ட்டில் பொய் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்” என்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும்போது, “தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம். இதற்கு முதல்-மந்திரியே பொறுப்பேற்க வேண்டும்” என்றார். #Sabarimalatemple #SC
Tags:    

Similar News