செய்திகள்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் தொடங்கியது- 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரம்புக்குள் வர வாய்ப்பு

Published On 2018-12-22 06:01 GMT   |   Update On 2018-12-22 06:01 GMT
ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. #GST #GSTCouncilMeeting
புதுடெல்லி:

நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.



இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

சமீபத்தில் மும்பையில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்கள், 18 அல்லது அதற்கு குறைவான சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். இன்றைய கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28 சதவீத வரியை தொடரவும், மற்ற 99 சதவீத பொருட்கள் 18 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவரவும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.சி., ஆட்டோமொபைல், டயர், சிமெண்டு, ரியல் எஸ்டேட் சாதனங்கள், சில எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியவை மீதான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GST #GSTCouncilMeeting
Tags:    

Similar News