செய்திகள்

வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார்: தலாய் லாமா

Published On 2018-12-15 02:30 GMT   |   Update On 2018-12-15 02:30 GMT
வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார் என திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். #DalaiLama
மும்பை :

திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா மும்பையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மும்பை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான பிரெஞ்ச் இதழ் ஆசிரியர் ஒருவர் என்னை பேட்டி எடுத்தார். அப்போது அவர், வருங்காலத்தில் ஒரு பெண் தலாய் லாமா உருவாவது சாத்தியமா? என கேட்டார்.

அதற்கு நான் ஆமாம் என்றேன். வருங்காலத்தில் பெண்கள் அமைப்பு வலுப்பெறும் போது அது நிச்சயமாக நடக்கும் என்றேன். புத்த மத பாரம்பரியம் மிகவும் சுதந்திரமானது. ஆண், பெண் இருபாலருக்கும் புத்தர் சம உரிமை கொடுத்தார்.

உடல் நல கல்வியை போல மனநல கல்வியும் முக்கியமானது. இந்தியாவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் குறித்த ஞானம் இருக்கிறது. இந்திய நாகரிகம் மட்டுமே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தியானம் போன்ற உயர்ந்த சிந்தனைகளை கொண்டுள்ளது. மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் அதிக தொடர்பு உள்ளது.

20-வது நூற்றாண்டில் அதிக வன்முறைகளும், வலிகளும் அரங்கேறின. 21-வது நூற்றாண்டில் அது தொடராமல் அமைதி நிலவவேண்டும். ஆனால் உள்ளத்தில் அமைதியில்லாமல் நாம் வெளியே அமைதியை வளர்க்க முடியாது. மனித அறிவுத்திறன் நல்ல மனதுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.#DalaiLama
Tags:    

Similar News