செய்திகள்

பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம் - புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

Published On 2018-11-11 14:25 GMT   |   Update On 2018-11-11 14:42 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசிக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி அங்கு இரு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார். #PMmodiinVaranasi #Varanasidevelopmentschemes
லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள  தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நாளை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை  தொடங்கி வைக்கிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வாரணாசிக்கு வரும் பிரதமர் மோடி 1,571.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாரணாசி நாற்கர விரைவு நெடுஞ்சாலை மற்றும் பாபத்பூர்-வாரணாசி நெடுஞ்சாலைகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த புதிய சாலைகள் மூலம் லக்னோ-வாரணாசி, அசாம்கர்-வாரணாசி, கோரக்பூர்-வாரணாசி, அயோத்தியா வாரணாசி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். வாகனங்களுக்கான எரிபொருள் செலவும் மிச்சமாகும் என கருதப்படுகிறது.

மேலும்,  5,369.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின்கீழ் அமைந்துள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை கப்பல் போக்குவரத்து திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்த திட்டம்  ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் 3 சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்தபடும்.

வாஜித்பூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் மோடி நாளை இரவு டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PMmodiinVaranasi  #Varanasidevelopmentschemes
Tags:    

Similar News