செய்திகள்

ரபேல் ஊழல் விசாரணை நடந்தால் மோடி தப்பவே முடியாது - ராகுல் காட்டம்

Published On 2018-11-02 11:28 GMT   |   Update On 2018-11-02 11:28 GMT
ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக இன்று புதிய ஆதாரத்தை வெளியிட்ட ராகுல் காந்தி, இதுதொடர்பான விசாரணை தொடங்கினால் பிரதமர் மோடி தப்பவே முடியாது என குறிப்பிட்டுள்ளார். #Rafaledeal #Rahulfires #Modiwillnotsurvive
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்களை இந்த பேட்டியின்போது அவர் வெளியிட்டார்.

ரபேல் போர் விமானங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து அம்பானிக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம்,  அம்பானியின் நிறுவனத்துக்கு நிலம் இருப்பதால் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

ஆனால், வெறும் 8.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான அம்பானியின் நிறுவனத்துக்கு டசால்ட் நிறுவனம் 284 கோடி ரூபாய் தந்தது. அந்த பணத்தை வைத்துதான் பின்னர் அம்பானியின் நிறுவனத்துக்காக நிலம் வாங்கப்பட்டது. ரபேல் போர் விமான ஊழலில் ஒரு பகுதியாக இந்த பணப்பரிவர்த்தனை நடந்தது.


இல்லாவிட்டால் வெறும் 8.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான அம்பானியின் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவை அத்தனையும் மோடிக்கும் அம்பானிக்கும் மட்டுமே தெரியும்.

தற்போது இவ்விவகாரம் பொதுவெளிக்கு வந்து விட்டதால் இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஆதாரங்களை சேகரிக்க தொடங்கிய சி.பி.ஐ. இயக்குனர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் ரபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக பல ஆண்டுகளாக பேரம் பேசப்பட்டு வந்த நிலையில் அம்பானியின் நன்மைக்காக ஒரே நாளில் இந்த ஒப்பந்தத்தை மோடி ஏற்படுத்தினார்.

ஒருநபரை காப்பாற்றுவதற்காக இந்த உண்மைகளை எல்லாம் டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மறைத்து வருகிறார். அந்த ஒருநபர் வேறு யாருமில்லை. நமது பிரதமர் மோடிதான் அந்நபர்.  இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டால் மோடியால் தப்பவே முடியாது. அரசியலில் மீண்டும் தலைதூக்கவும் முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rafaledeal #Rahulfires #Modiwillnotsurvive
Tags:    

Similar News