செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடும் - அமித் ஷா

Published On 2018-09-15 14:08 GMT   |   Update On 2018-09-15 14:08 GMT
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட்டு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். #AmitShah
ஐதராபாத் :

தெலுங்கானா சட்டப்பேரவையை முதல்வர் சந்திரசேகர ராவ் முன்கூட்டியே கலைத்ததால் அம்மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐதராபாத் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பின்னர் மஹபூப்நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரத்த சந்திரசேகர ராவ் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டார். இதனால், சட்டசபை மற்றும் பாராளுமன்றம் என இரண்டு தேர்தல்களை சந்திப்பதால் தெலங்கானாவின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. சந்திரசேகர ராவ் ஏன் தெலுங்கானா மக்கள் மீது நிதிச்சுமையை திணிக்க வேண்டும் ?.

மே மாதம் நடைபெற இருந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெருவோம் எனும் நம்பிக்கை இல்லாத சந்திரசேகர ராவ், நவம்பர்-டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் மட்டும் எப்படி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார். எனவே, முன்கூட்டியே தேர்தல் நடந்தாலும் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை.

அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மதத்திற்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது, ஆனால் சந்திரசேகர ராவ் சிறுபான்மையினருக்கு 12 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். இது தவறான முன்னுதாரனமாகும்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்காது. அடுத்த தேர்தலில் தெலுங்கானாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து களமிறங்கி வெற்றி பெறும்.

ராகுல் காந்தியும் எப்படியாவது தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என கனவு காண்கிறார். ஆனால், முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வர் அஞ்சய்யா மற்றும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு ஏற்பட்ட அவமரியாதைகளை தெலுங்கு மக்கள் மறந்துவிடவில்லை. எனவே ஆட்சியை கைப்பற்றுவது ராகுல் காந்திக்கு கனவாகவே இருக்கும்.

அசாம் மாநிலத்தில் அத்துமீறி நுழைந்து குடியிருந்தவர்களை நாங்கள் வெளியேற்றியுள்ளோம். எங்களது நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து முக்கிய கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால், நாட்டில் எந்த ஊடுருவல்காரர்களும் அனுமதி இல்லை என்பதே எங்களது நோக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #AmitShah
Tags:    

Similar News