செய்திகள்

கேரளாவில் மலை கிராமத்தில் சிக்கிய கர்ப்பிணிகளை ஹெலிகாப்டரில் மீட்ட விமானப்படை

Published On 2018-08-22 06:59 GMT   |   Update On 2018-08-22 06:59 GMT
கேரள மாநிலத்தில் மலை கிராமத்தில் சிக்கிய கர்ப்பிணிகளை ஹெலிகாப்டரில் சென்று விமானப்படையினர் மீட்டனர்.
பாலக்காடு:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி மலை கிராமம். கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெல்லியாம்பதி செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது.

அங்கு வசிக்கும் 3,500 பேர் பாதிக்கப்பட்டனர். 6 நாட்களுக்கும் மேல் அவர்கள் தவித்து வந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ராணுவத்தினரும், மருத்துவ குழுவினரும் 26 கி.மீ. மலைப் பாதையில் நடந்து சென்று கிராமத்தினருக்கு உதவி வந்தனர்.

அங்கு வசித்து வருபவர்களில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நெல்லியாம்பதிக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்க விமானப்படையினர் முயற்சி செய்தனர். ஆனால் மோசமான கால நிலை காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

நேற்று மழை குறைந்ததை தொடர்ந்து நெல்லியாம்பதி மலை கிராமத்துக்கு 4 ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன. அங்கு சென்ற விமானப்படையினர், மருத்துவ குழுவினர் உதவி தேவைப்பட்ட 12 பேரை மீட்டு வந்து பாலக்காடு, நெம்மாரா மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இவர்களில் 4 பேர் கர்ப்பிணிகள் ஆவார்கள். நெல்லியாம்பதியில் 3,500-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News