செய்திகள்

பாராளுமன்றம்- சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை - நிதிஷ்குமார்

Published On 2018-08-15 06:22 GMT   |   Update On 2018-08-15 06:22 GMT
பாராளுமன்றம்- சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார். #Parliament #Assembly #SimultaneousElections

பாட்னா:

உலகில் பல நாடுகளில் பாராளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

அதேபோல் இந்தியாவிலும் பாராளுமன்றத்துடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதோடு சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் நடத்தலாமா? என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக மத்திய தேர்தல் கமி‌ஷன் அனைத்து கட்சிகளுடன் ஏற்கனவே ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளது.


 

இது தொடர்பாக பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் கூறியதாவது:-

ஒரே நேரத்தில் பாராளுமன்றம்- சட்டசபை தேர்தல் நடத்துவது சிறப்பான ஒன்று. ஆனால், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்துவதற்கு சாத்தியமில்லை.

ஏனென்றால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக விரிவாக ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. அதற்கு கால அவகாசம் தேவை. பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அதற்கு போதிய காலம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பீகாரில் முக்கிய எதிர்க் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு தேர்தல் நடத்தினால் மாநில கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டு விடும். இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி கூறியுள்ளது.

பீகாரில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

ஆனால், தொகுதி பங்கீடு சம்பந்தமாக இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்குவதாக பாரதிய ஜனதா கூறுவதால் ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, கூட்டணியில் சிக்கல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News