செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 17ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

Published On 2018-08-14 06:48 GMT   |   Update On 2018-08-14 06:48 GMT
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரிக்க உள்ளது. #SterliteProtest #NGT
புதுடெல்லி:

தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது.  இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ந்தேதி அனுமதி அளித்தது.

இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #SterliteProtest #NGT
Tags:    

Similar News