செய்திகள்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமச்சீரான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை - ராகுல் காந்தி உறுதி

Published On 2018-08-13 16:03 GMT   |   Update On 2018-08-13 16:03 GMT
பா.ஜ.க. அரசு விதித்துள்ள கொள்ளைக்கார வரிக்கு பதிலாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது சமச்சீரான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #RahulHyderabadvisit #oneslabGST
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் இருநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிற்பகல் ஐதராபாத்தில் உள்ள ஷம்சாபாத் விமான நிலையத்தை ராகுல் வந்தடைந்தார்.

அவரை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அன்புடன் வரவேற்றனர். ஐதராபாத் நகரில் உள்ள அம்மாநில சட்டசபை அருகே  அமைக்கப்பட்டுள்ள தெலுங்கானா தனிமாநில போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அருகாமையில் உள்ள கிளாசிக் கன்வென்ஷன் அரங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களுக்கும்  சரக்கு மற்றும் சேவை வரி  விதிக்கப்படுவது குறித்து இந்த கலந்துரையாடலின்போது ஒரு பெண் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராகுல், தற்போது மோடி அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி GST - Goods and Service Tax அல்ல.  இந்த வரிவிதிப்பு முறை ஏழைகளின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை பறிக்கும் வழியாகும். (ஷோலே இந்திப்படத்தில் வரும் கொள்ளைக்கார வில்லன்) கப்பர் சிங் வரி  Gabbar Singh Tax என்று குறிப்பிட்டார்.

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது ஒரே அளவிலான சமச்சீரான வரிவிதிப்பை அமல்படுத்துவோம். 5 விதமான வரிகள் இருக்காது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் வரிக்காக பல்வேறு கணக்குளை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

கடந்த இரண்டாண்டுகள் மட்டும் நாட்டில் உள்ள 15 பெரும் பணக்காரர்களுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ள மோடியின் அரசு, இங்குள்ள கர்நாடக மாநில அரசு தள்ளுபடி செய்த  30 ஆயிரம் கோடி விவசாய கடனில் பாதி தொகையை தனது பங்காக ஏற்றுகொள்ள மறுக்கிறது என தெரிவித்தார். #RahulGandhi #RahulHyderabadvisit #oneslabGST
Tags:    

Similar News