செய்திகள்

பிரதமரின் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கான செலவுகளை ஏற்பது யார்? - சிவசேனா எம்.பி கேள்வி

Published On 2018-07-24 12:01 GMT   |   Update On 2018-07-24 12:01 GMT
பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கான நிதியை அளிப்பது யார்? என பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivSena
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த், பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு கொள்கைக்கும், நடைமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் செய்த அதே தவறை நாமும் செய்ய வேண்டுமா எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிக்குமான நிதியை வழங்குவது யார்? என கேள்வி எழுப்பிய எம்.பி அரவிந்த், ஒருவேளை அரசாங்கத்தின் நிதியில் இருந்து செலவு செய்யப்படுமானால், அது சரியா எனவும் வினவினார்.

தொடர்ந்து பேசிய எம்.பி, தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவு தொகையினை மட்டும் பயன்படுத்தி தேர்தலில் வென்றோம் என தங்கள் மனதை தொட்டு எம்.பிக்கள் கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்தலின்போது எம்.பிக்கள் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதுபோல், அனைத்து பிரதமர்களும் தேர்தலின்போது தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு எம்.பியாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். #ShivSena
Tags:    

Similar News