செய்திகள்

இந்து பாகிஸ்தான் - சசிதரூரின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை

Published On 2018-07-12 11:02 GMT   |   Update On 2018-07-12 11:02 GMT
பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்ற கருத்தை தெரிவித்த சசிதரூரை காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. #ShashiTharoor
புதுடெல்லி :

இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் சந்திக்கும் மிரட்டல்கள் என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் கருத்தரங்கம் நடந்தது.

இக்கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்தியாவில் விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்.

இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. இப்போது பாராளுமன்ற மேல் சபையில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த நடவடிக்கையை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.

இதை அவர்கள் நடைமுறை படுத்தினால் மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும் என்றார்.

பா.ஜ.க.வை சீண்டிப்பார்க்கும் விதமாக அமைந்த சசிதரூரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், சசிதரூரின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மண்ணிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தும் விதமாக மீண்டும் கருத்து தெரிவித்த சசிதரூர், பா.ஜ.க.விற்கு உண்மையிலே இந்து ராஷ்டிரா என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லை என்றால், மதசார்பற்ற குடியரசான இந்தியாவில் இந்து ராஷ்டிரம் அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என பாரதிய ஜனதா கட்சி பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அப்படி அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள விவாதம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, சசிதரூரை எச்சரித்துள்ளதாகவும், அவரை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #ShashiTharoor
Tags:    

Similar News