செய்திகள்

2024-ம் ஆண்டில் வேண்டுமானால் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தலாம் - தம்பிதுரை

Published On 2018-07-07 11:17 GMT   |   Update On 2018-07-07 11:17 GMT
மாநில சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் 2024-ம் ஆண்டில் வேண்டுமானால் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார். #OneNationOneElection
புதுடெல்லி :

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு காய்நகர்த்தி வருகிறது. மத்திய சட்ட ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் சட்ட ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் , துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சட்ட ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் எதிர்பு தெரிவித்தோம். 2019-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்றாக தேர்தல் நடத்த கூடாது, வேண்டுமானால் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து 2024-ம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம்  என தெரிவித்தார்.

மேலும், ‘ 5 ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் கொண்டுவர கூடாது, அதை எற்கவும் முடியாது. ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலம் உள்பட பல மாநிலங்கள் சாச்ர்பில் இன்றைய சட்ட ஆணைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ’ எனவும் தம்பிதுரை கூறினார். #OneNationOneElection
Tags:    

Similar News