செய்திகள்

தினகரன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்

Published On 2018-07-05 03:33 GMT   |   Update On 2018-07-05 03:33 GMT
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
புதுடெல்லி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-



டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினரே அல்ல. கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக அவருக்கு அவசர அவசரமாக உறுப்பினர் அட்டையும், துணை பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

டி.டி.வி.தினகரன் தொடர்ச்சியாக கட்சியில் பிரிவினைகளை உருவாக்கி வந்தார். கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். அதனால் கட்சி விதிமுறைகளின் அடிப்படையில் அவரை பதவிநீக்கம் செய்ய அனைத்து அதிகாரமும் கட்சிக்கு உண்டு.

அவர் பிரிவினைவாதியாக செயல்பட்டது மட்டுமின்றி அ.தி.மு.க. கட்சிக்கு எதிராக புதிய கட்சியையும் தொடங்கி இருக்கிறார். ஒருவர் அடிப்படை உறுப்பினரே அல்லாத போது அவர் எப்படி கட்சிக்கும், கட்சியின் சின்னத்துக்கும் உரிமை கொண்டாட முடியும்?

கட்சி மற்றும் கட்சியின் சின்னத்தின் மீது உரிமை கொண்டாட டி.டி.வி.தினகரனுக்கும், அவரை சேர்ந்தவர்களுக்கும் எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர், கட்சி சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் கமிஷன் விதிமுறைகள், அ.தி.மு.க. கட்சியின் விதிமுறைகள், கட்சி பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் வாசித்துக் காட்டினார்.

அவற்றை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக கூறினர். 
Tags:    

Similar News