செய்திகள்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் - பா.ஜனதா பிரசாரத்தை பிரதமர் மோடி 28-ந் தேதி தொடங்குகிறார்

Published On 2018-06-23 23:25 GMT   |   Update On 2018-06-23 23:25 GMT
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாரதீய ஜனதா பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி உத்தரபிரதேசத்தில் தொடங்குகிறார். #ParliamentaryElection #NarendraModi
லக்னோ:

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான உத்திகளை வகுக்கும் முயற்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இப்போதே ஈடுபட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாரதீய ஜனதாவின் பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறார். அன்று உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள மகார் என்ற இடத்தில் நடைபெறும் பாரதீய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2½ லட்சம் பேரை திரட்டி பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு உள்ளார். கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு 11 மாவட்ட பாரதீய ஜனதா தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வருகிற 26-ந் தேதி கோரக்பூர் செல்லும் யோகி ஆதித்யநாத் அங்கிருந்தபடி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். மேலும் இது தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கட்சி எம்.பி.க்கள் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அன்று அவர் ஆலோசனை நடத்துகிறார்.  #ParliamentaryElection #NarendraModi
Tags:    

Similar News