செய்திகள்

குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 2 பேர் அடித்துக் கொலை - கவுகாத்தியில் பொதுமக்கள் தீவிர போராட்டம்

Published On 2018-06-11 04:00 GMT   |   Update On 2018-06-11 04:00 GMT
அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கவுகாத்தியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். #AssamChildKidnappers
கவுகாத்தி:

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கர்பி அங்லாங் பகுதியில் உள்ள பஞ்சரி காசரி கிராமம் வழியாக ஒரு கார் சென்றுள்ளது. டோக்மோகா நோக்கி சென்ற அந்த காரை பொதுமக்கள் சிலர் வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்போது காருக்குள் இருந்த நபர்களின் நீண்ட தலைமுடி மற்றும் அவர்களின் தோற்றத்தைப் பார்த்து குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

தாங்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், தங்களை உயிருடன் விட்டுவிடும்படியும் அவர்கள் கெஞ்சி உள்ளனர். அவர்களின் கெஞ்சலை காதில் வாங்காத கும்பல், மிகவும் கொடூரமாக தாக்கி உள்ளது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். அத்துடன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகப் பரவி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கவுகாத்தியில் நேற்று இரவு பொதுமக்கள் பலர் திடீரென ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க அரசு தவறிவிட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். #AssamChildKidnappers

Tags:    

Similar News