செய்திகள்

பழைய சம்பளமே போதும் - ரூ.3.5 லட்சம் ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள மறுத்த சத்தீஸ்கர் கவர்னர்

Published On 2018-06-06 14:53 GMT   |   Update On 2018-06-06 14:53 GMT
மாநில கவர்னர்களுக்கான மாத ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை மறுத்து பழைய ஊதியமே போதும் என சத்தீஸ்கர் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
ராய்ப்பூர்:

நாட்டின் அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுக்கான ஊதியம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 26 மாதங்கள் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக உள்ள  பால்ராம்ஜி தாஸ் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ள நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது. பழைய ஊதியமே தனக்கு போதுமானதாக இருப்பதாகவும், புதிய உயர்த்தப்பட்ட ஊதியம் தேவையில்லை என பால்ராம்ஜி தாஸ் அம்மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு (தணிக்கை) கடிதம் எழுதியுள்ளார்.

பால்ராம்ஜி தாஸின் கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கணக்குப்பிரிவு தலைவர் பழைய ஊதியமே அவருக்கு செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News