search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பள உயர்வு"

    • இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும்.
    • சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது ஆய்வு.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், புளூம்பெர்க் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சீனப் பொருளாதாரம் மந்தமாகியுள்ள நிலையில், நிறுவனங்கள் இந்தியப் பொருளியல் வளர்ச்சியைச் சாதகமாக்கிக்கொள்ள முனைந்திருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது.

    இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது.

    சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் முதலீட்டாளர்கள் அதிகப் பொருள்களை வாங்குகின்றனர்.

    இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளம் ஹாங்காங் ஊழியர்களைவிட 4.5 சதவீதம் அதிகம். சிங்கப்பூர் ஊழியர்களைவிட அது 7.7 சதவீதம் அதிகம் என கூறுகிறது.

    உயர் பதவிகளுக்கான ஊழியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாலும் தொழில்நுட்பம், தொழிலில் ஏற்படக்கூடிய இடையூறுகளை மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் திறனாளர் பற்றாக்குறையாலும் இந்தியாவில் சம்பளம் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும்.

    புதுடெல்லி:

    வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.

    இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

    அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சேர்த்து புதிய ஊதிய நிர்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல் கல்லாகும்.

    வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளர்கள் பலனடைவர்.

    • பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • கூட்டுக்கமிட்டி சார்பில் அனைத்து தொழிலாளருக்கும், 4 சதவீத சம்பள உயர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு, பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), தென்னிந்திய இறக்குமதி எந்திர துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா) உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., அண்ணா தொழிற்சங்கம், எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, இவற்றின் பிரதிநிதிகள் சம்பள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

    கடந்த 2021 செப்டம்பர் மாதம் உருவான ஒப்பந்தப்படி, 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறை சம்பளத்தில் இருந்து 4 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி மற்றும் 4 சதவீத சம்பள உயர்வுடன் புதிய சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களும் அந்தந்த நிறுவனங்களில் சம்பளத்தை கேட்டுப்பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தீபாவளி பண்டிகை ஆர்டர் ஓரளவுக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போனஸ் கணக்கீடு செய்வதற்காக புதிய சம்பள உயர்வு இடையில் வழங்கப்படாமல் இருந்தது. அதன்படி இவ்வாரத்தில் இருந்து புதிய சம்பள உயர்வை கணக்கிட்டு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சம்பத் கூறுகையில், தொழிற்சங்கம் இயங்கும் நிறுவனங்களில் ஒப்பந்தப்படி கடந்த மாதமே 4 சதவீத சம்பள உயர்வு கிடைத்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளிக்கு பிறகு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். எப்படியிருந்தாலும் ஒப்பந்தம் செய்தபடி 4 சதவீத சம்பள உயர்வு வழங்கியாக வேண்டும். எனவே கூட்டுக்கமிட்டி சார்பில் அனைத்து தொழிலாளருக்கும், 4 சதவீத சம்பள உயர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சம்பள ஒப்பந்தப்படி கட்டிங், டெய்லர், அயர்ன், பேக்கிங், சிங்கர், நிட்டிங் மெஷின் தொழிலாளருக்கு ஷிப்டுக்கு 512.66 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். செக்கிங் பணியாளருக்கு 391.08 ரூபாய், லேபிள் தொழிலாளிக்கு 375.89 ரூபாய், கை மடித்தல் பணிக்கு 371.95 ரூபாய், டேமேஜ் தொழிலாளிக்கு 343.67 ரூபாய், அடுக்கி கட்டும் தொழிலாளிக்கு 312.34 ரூபாய் அளவுக்கும், லோக்கல் மெஷின் பிரிவுக்கு 493.98 ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    • பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 25 சதவீத கூலி உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
    • பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

    திருப்பூர்:

    பித்தளை மற்றும் காப்பர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 22.5 சதவீதம் சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதைஅடுத்து, பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் பித்தளை மற்றும் காப்பர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. தொழிற்சங்க தரப்பில், வேலுச்சாமி (எல்.பி.எப்.,), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), தேவராஜ் (ஏ.டி.பி.,), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.,), அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.,), அசோக்குமார் (ஐ.என்.டி.யு.சி.,), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூனன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோரும், உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் துணை தலைவர் மனோகர், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார், துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 25 சதவீத கூலி உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். உற்பத்தியாளர் சங்கத்தினர் 22.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக கூறினர். தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்தனர். உற்பத்தியாளர் சங்கத்தினர் இதற்கு மேல் தர முடியாது என கூறவே 22.5 சதவீதத்தை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொண்டனர்.

    பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. புதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கத்தினர் உற்பத்தியாளர் சங்கத்துடன்3 மாதமாக நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்தது.இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சப் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு முடிவுக்கு வந்தது.

    அதுபோல் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பித்தளை மற்றும் காப்பர் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வில் தீர்வு ஏற்பட்டது. கூலி உயர்வு முடிவுக்கு வந்ததையொட்டி பாத்திர தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய கூலி உயர்வு தொடர்–பான ஒப்–பந்–தம் நாளை மறு–நாள் (புதன்–கி–ழமை) கையெழுத்தாக உள்ளது. மேலும் இந்த கூலி உயர்வு கடந்த 1.1.2023 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
    • பித்தளைப் பாத்திரம் உற்பத்திக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் அனைத்து தொழிற் சங்க கூட்டு கமிட்டி சார்பில், அதன் தலைவர் வேலுச்சாமி (எல்.பி.எப்.,), செயலாளர் ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), பொருளாளர் தேவராஜ் (ஏ.டி.பி.,), கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன் (காமாட்சியம்மன் சங்கம்), எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் தலைவர் துரைசாமி, துணை தலைவர் குமாரசாமி, துணை செயலாளர் மதிவாணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழில் மந்த நிலையில் உள்ளது. எனவே பேச்சு வார்த்தையை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைப்பது. அதுவரை பழைய ஒப்பந்தத்தை கடை பிடிப்பது என்ற கருத்தை முன்வைத்தனர். இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளவில்லை.இதற்கு உற்பத்தியாளர் சங்கத்தினர், 28ல் சிறப்பு மகாசபை கூட்டம் நடத்த உள்ளோம். அதில் நிர்வாகிகள் கருத்தை கேட்டு தகவல் தெரிவிக்கிறோம் என்றனர். அதனை தொடர்ந்து, பித்தளைப் பாத்திரம் உற்பத்திக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க துணை தலைவர் மனோகர், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் கூறிய கருத்தையே இவர்களும் தெரிவிக்கவே, தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மறு தேதி குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

    • தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சு வார்த்தை குறித்த விளக்க கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அனுப்பர்பாளையம் : 

    திருப்பூர் பாத்திர அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தேவராஜ் (ஏ.டி.பி.,), குப்புசாமி (சி.ஐ.டி.யு.,), பாண்டியராஜன் (எச்.எம்.எஸ்.,), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.,), ரத்தினசாமி (எல்.பி.எப்.,), அசோக் (ஐ.என்.டி.யு.சி.,), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூனன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் புதிய சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடந்த டிசம்பர் மாதம் 31ந் தேதி கடிதம் கொடுக்கப்பட்டது.கடிதத்திற்கு பதில் வராத காரணத்தால், பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை சுமூகமாக முடிக்க திருப்பூர் தொழிலாளர் துணை ஆணையரை சந்தித்து கடிதம் கொடுப்பது, தொடர்ந்து, அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டம் கூட்டி, தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சு வார்த்தை குறித்த விளக்க கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் நேற்று முன்தினம் 31ந் தேதி நிறைவு பெற்றது.
    • அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பினர்.

    அனுப்பர்பாளையம்,ஜன.2-

    திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் 250 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் நேற்று முன்தினம் 31ந் தேதி நிறைவு பெற்றது. புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பினர்.

    இதனையொட்டி எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் தொழில் மந்த நிலையில் உள்ளதால் பழைய சம்பள ஒப்பந்தத்தையே மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பது, அதன்பின் புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேசுவது என தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து விவாதிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு., சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் உற்பத்தியாளர் சங்கத்தினர் அனுப்பிய கடிதத்தின்படி தற்போதைய கூலியை ஓராண்டுக்கு நீட்டிப்பது என்ற கருத்தை முற்றிலும் நிராகரிப்பது,ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் இன்றைய விலைவாசி உயர்வும் பாத்திர தொழிலாளர்களின் வாழ்வு நிலையையும் கணக்கில் கொள்ளாத தாங்கள் சங்கத்தின் இந்த அணுகுமுறை பாத்திர உற்பத்தியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான சமூக உறவை பாதிக்கும்.இத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தை உருவாக்கி சம்பள உயர்வு குறித்து ஒருவார காலத்திற்குள் அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
    • இவர்கள் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் தூர இருப்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரெயில்வே துறை.

    இந்திய ரெயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13 ஆயிரத்து 169 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல சரக்குகளை கையாள 8 ஆயிரத்து 479 சரக்கு ரெயில்கள் உள்ளது.

    இவற்றை நிர்வகிக்க ரெயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் தூர இருப்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தனர். கொரோனா பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்களின் கோரிக்கை குறித்த முடிவுகள் தள்ளிபோனது.

    தற்போது இக்கோரிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக ரெயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரெயில்வே துறையின் ஊழியர்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுத்துள்ளது. அதன்படி இத்துறையில் 7,8,9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்குரிய பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அவர்கள் குரூப் ஏ பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள்.

    மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நிதி அமைச்சகமும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

    ரெயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் பணி இன்னும் மேம்படும்.

    உலகிலேயே சிறப்பாக செயல்படும் இந்திய ரெயில்வே துறை இதன்மூலம் இன்னும் மேம்படும். அவர்கள் தான் இத்துறையின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் ரெயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும்.

    மாநில கவர்னர்களுக்கான மாத ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை மறுத்து பழைய ஊதியமே போதும் என சத்தீஸ்கர் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
    ராய்ப்பூர்:

    நாட்டின் அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுக்கான ஊதியம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 26 மாதங்கள் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக உள்ள  பால்ராம்ஜி தாஸ் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ள நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது. பழைய ஊதியமே தனக்கு போதுமானதாக இருப்பதாகவும், புதிய உயர்த்தப்பட்ட ஊதியம் தேவையில்லை என பால்ராம்ஜி தாஸ் அம்மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு (தணிக்கை) கடிதம் எழுதியுள்ளார்.

    பால்ராம்ஜி தாஸின் கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கணக்குப்பிரிவு தலைவர் பழைய ஊதியமே அவருக்கு செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
    ×