செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மோடி வருகையையொட்டி வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பிரிவினைவாத தலைவர்கள்

Published On 2018-05-19 07:31 GMT   |   Update On 2018-05-19 07:31 GMT
ஜோசிலா சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அங்குள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி வருவதாக பிரிவினைவாத அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் தலைமையில் ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக் பகுதியை நோக்கி இன்று 11 மணிக்கு பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அந்த பேரணியை நிறுத்துவது மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் அவரவர் வீடுகளிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மிர்வாய்ஸ் உமர் பாரூக், ‘ஜனநாயகம் மீதான நம்பிக்கையை ஆளும் அரசு மீண்டும் தர மறுத்துள்ளது. நாங்கள் அமைதியான முறையில் பேரணியை நடத்துவோம்’ என பதிவிட்டிருந்தார்.

மோடியின் வருகைக்காக அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஷேர் இ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்க மையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை பிரதமர் அங்கிருந்து கிளம்பும் வரை நீட்டிக்கப்படும் எனவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. #separatist #ModiVisitJK #housearrest
Tags:    

Similar News