செய்திகள்

நாசாவுக்கே நாங்கதான் சப்ளை - தொழிலதிபரிடம் காப்பர் தகடை காட்டி ரூ.1.43 கோடி சுருட்டல்

Published On 2018-05-09 03:53 GMT   |   Update On 2018-05-09 03:53 GMT
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தங்களிடம் இருந்து சிறப்பு ஆடைகளை வாங்குவதாக கூறி, தொழிலதிபரிடம் ரூ.1.43 கோடி ரூபாய் ஏமாற்றிய தந்தை - மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவது போல, டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை ஏமாற்றி ரூ.1.43 கோடி சுருட்டிய சம்பவம் நடந்துள்ளது. விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக்கானிக்குகளாக உள்ளனர்.

வசதிபடைத்த ஆட்களிடம் சென்று நட்பை ஏற்படுத்திக்கொண்டு, ‘தங்களிடம் அதிக விலை மதிப்பு கொண்ட காப்பர் தகடு இருப்பதாகவும், அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில் அதற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், அதிக விலைக்கு தகடை வாங்க நாசா தயாராக உள்ளது. எனவே, எங்களிடம் உள்ள தகடை வாங்கி நாசாவுக்கு விற்க உங்களுக்கு தெரிந்த ஆட்கள் யாராவது இருக்கிறார்களா?’ என கேட்பது வழக்கம்.

இவர்களது பொய்யை மற்றவர்கள் நம்ப, நாசாவுக்கு விண்வெளி உடைகள், வேதியல் பொருட்கள் நாங்கள் தயாரித்து அனுப்புவதாக கூறி போலியான ஒரு விண்வெளி உடையை காட்டுவர். இந்நிலையில், அவர்களது பொய்யை நம்பி தொழிலதிபர் ரூ.1.43 கோடி பணத்தை இழந்துள்ளார்.



‘காப்பர் தகடு தனிப்பட்ட பல இயற்பியல் தண்மைகளை கொண்டுள்ளதால், நாசாவில் மட்டுமே அது பயன்படும்’ என அவர்கள் கூறி, தொழிலதிபர் நம்ப வேண்டும் என்பதால், அரிசியை அந்த தகடு ஈர்ப்பது போல சில வித்தைகளை காண்பித்து எளிதாக அவரை மயக்கி விட்டனர்.

மோசடி பேர்வழிகளின் வித்தைகளில் மயங்கிய தொழிலதிபர், பல்வேறு கட்டமாக ரூ.1.43 கோடிபணத்தை கொடுத்துள்ளார். கடைசியில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அவர் போலீசில் சென்று புகாரளிக்கவே, தற்போது தந்தை - மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
Tags:    

Similar News