செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ விபத்து வழக்கு: விசாரணை 18-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2018-05-02 18:57 GMT   |   Update On 2018-05-02 18:57 GMT
குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. #TheniFire #Kurangani
புதுடெல்லி:

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் மலை ஏற்றத்திற்காக சென்ற 23 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜீவ் தத்தா என்ற வக்கீல் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மூல மனுவின் மீது இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜாவேத் ரஹீம், எஸ்.பி. வாங்டி, நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பிலும் நேற்று இந்த சம்பவம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று மீண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி, குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரி அதுல்யா மிஸ்ரா தலைமையில் விசாரணை குழு அமைத்துள்ளது. விசாரணை குழுவினர் விசாரணை முடிந்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை வருகிற (மே) 18-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, 18-ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.   #TheniFire #Kurangani  #Tamilnews
Tags:    

Similar News