செய்திகள்

கே.எம் ஜோசப் நியமன விவகாரம் - முடிவெடுக்காமல் முடிவடைந்த கொலிஜியம் கூட்டம்

Published On 2018-05-02 13:57 GMT   |   Update On 2018-05-02 13:57 GMT
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை நியமிப்பது தொடர்பாக இன்று நடந்த கொலிஜியம் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. #KMJoseph
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

தீபக் மிஸ்ரா

இது தொடர்பாக முடிவெடுக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் இன்று கூடியது. கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், கே.எம் ஜோசப் பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. #KMJoseph

Tags:    

Similar News