செய்திகள்

நிலக்கரி சுரங்க ஊழல் - கோண்டுவானா இஸ்பத் நிறுவன இயக்குனருக்கு 4 ஆண்டு ஜெயில்

Published On 2018-05-01 07:42 GMT   |   Update On 2018-05-01 07:42 GMT
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கோண்டுவானா இஸ்பத் நிறுவன இயக்குனருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #CoalScam #CoalScamVerdict #GondwanaIspat
புதுடெல்லி:

பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் அனைத்தும் டெல்லியில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கோண்டுவானா இஸ்பத் நிறுவனம் மீதான வழக்கும் ஒன்று.

மகாராஷ்டிர மாநிலம் சந்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மஜ்ரா நிலக்கரி சுரங்கத்தை 2003-ம் ஆண்டு கோண்டுவானா இஸ்பத் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, இஸ்பத் கோண்ட்வானா நிறுவனம், அதன் இயக்குனர் அசோக் தாகா ஆகியோர் மீது 2014-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. குற்றச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில் அசோக் தாகா குற்றவாளி என நீதிபதி பாரத் பராஷர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்து, தண்டனை விவரத்தை ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று அசோக் தாகாவுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது, குற்றவாளியான அசோக் தாகாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவருக்கு ஒரு கோடி ரூபாயும், அவரது நிறுவனத்திற்கு 60 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CoalScam #CoalScamVerdict #GondwanaIspat
Tags:    

Similar News