செய்திகள்

மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே கலந்தாய்வு நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு

Published On 2018-04-24 23:05 GMT   |   Update On 2018-04-24 23:05 GMT
மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி:

கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்துள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “சென்ற ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவில் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை ‘நீட்’ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. மருத்துவ படிப்பில் தரக்கட்டுப்பாட்டை மருத்துவ கவுன்சில் கவனித்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் மாநில அரசு வழங்கும் இடஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் மீதான இடைக்கால உத்தரவை நீதிபதிகள் அறிவித்தனர்.

அதில், “இந்த மனுவின் மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்த புதிய விதிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற வேண்டும். மாணவர் சேர்க்கை என்பது இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே அமையும்” என்று தெரிவித்தனர். 
Tags:    

Similar News