செய்திகள்
2014-ம் ஆண்டு நடந்த சார்க் மாநாட்டில் மோடி மற்றும் நவாஸ் ஷெரீப்

ரத்தான சார்க் மாநாட்டை நடத்த பாக். திட்டம் - புறக்கணிக்கும் மனநிலையில் இந்தியா

Published On 2018-04-24 14:42 GMT   |   Update On 2018-04-24 14:42 GMT
கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது போல, இந்த ஆண்டும் அங்கு மாநாடு நடக்கும் பட்சத்தில் அதனை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SAARC
புதுடெல்லி:

தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருந்தது. ஆனால், உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் இந்தியா அந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்தியாவை தொடர்ந்து இலங்கை, நேபாளம் நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தது.

இதன் காரணமாக மாநாடு ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட மாநாட்டை நடத்த பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் நேபாளம் சென்ற பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி இது தொடர்பாக அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இந்த ஆண்டு மாநாட்டை நடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. சார்க் நாடுகளின் ஆதரவை பெற்று விட்டால் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திவிடலாம் என்பது பாகிஸ்தான் கணிப்பாக உள்ளது. ஆனால், மாநாடு பாகிஸ்தானில் நடக்கும் பட்சத்தில் இந்தியா மாநாட்டை புறக்கணிக்கலாம் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் சுமூகமான நிலை இல்லாததால், மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து இந்தியா,   பின்வாங்க திட்டமிட்டு இருக்க கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றிணைந்து செல்ல முடியாது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. #SAARC #India
Tags:    

Similar News