செய்திகள்

தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானத்தை நிராகரித்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

Published On 2018-04-23 05:08 GMT   |   Update On 2018-04-23 05:08 GMT
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான நோட்டீசை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார். #VenkaiahNaidu #DipakMisra #ImpeachmentMotion
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள ஏழு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 64 எம்.பி.க்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.



இதுதொடர்பாக நேற்று வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப்பையும் தொடர்பு கொண்டு பேசினார். அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுடன் ஆலோசித்தார். சட்ட அமைச்சக முன்னாள் செயலாளர் பி.கே.மல்கோத்ரா, சட்டசபை முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் ஆகியோருடனும் விவாதித்தார். மாநிலங்களவை செயலக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் நோட்டீசை வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது.

தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசை நிராகரித்தால், அதை எதிர்த்து கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். எனவே, இந்த விவகாரம் கோர்ட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #VenkaiahNaidu #DipakMisra #ImpeachmentMotion

Tags:    

Similar News