செய்திகள்

நாடு முழுவதும் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.80 ஆயிரம் கோடி

Published On 2018-04-23 00:26 GMT   |   Update On 2018-04-23 00:26 GMT
நாடு முழுவதும் 31 கோடியே 45 லட்சம் ஜன்தன் வங்கி கணக்குகளில் சேமிப்பு ரூ.80 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தின உரை ஆற்றியபோது, அனைத்து தரப்பினருக்கும் வங்கி கணக்கு தொடங்குகிற நோக்கத்தை கொண்டு, ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தை அறிவித்தார்.

தொடர்ந்து, அதே ஆண்டு, ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி அவர் ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் மொத்தம் 31 கோடியே 45 லட்சம் ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகளில் மொத்த சேமிப்பு தொகை ரூ.80 ஆயிரத்து 545 கோடியே 70 லட்சம் ஆகும். இது கடந்த 11-ந் தேதி நிலவரம் ஆகும்.

பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி அதிரடியாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

2016 நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த ஜன்தன் வங்கி கணக்குகளில் மொத்த சேமிப்பு தொகை ரூ.45 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. ஆனால் அந்த மாத கடைசியில் இந்த சேமிப்பின் அளவு அதிரடியாக ரூ.74 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

அதன்பிறகு அந்த வங்கி கணக்குகளில் சேமிப்பு குறைந்தது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒரு நிலையான முறையில் சேமிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜன்தன் வங்கி கணக்குகளில் சேமிப்பு அளவு ரூ.73 ஆயிரத்து 878 கோடியே 73 லட்சம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் இது ரூ.75 ஆயிரத்து 572 கோடியாக உயர்ந்தது. கடந்த மாதம் இது மேலும் பெருகி ரூ.78 ஆயிரத்து 494 கோடியாக உயர்ந்தது.

இதேபோன்று ஜன்தன் வங்கி கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

2017-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜன்தன் வங்கி கணக்குதாரர்களின் எண்ணிக்கை 26½ கோடியாக இருந்தது. அதுதான் தற்போது 31 கோடியே 45 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.

இவை யாவும் மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News