செய்திகள்

தூக்கு தண்டனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கிறது: பிருந்தா கரத் பேட்டி

Published On 2018-04-22 20:05 GMT   |   Update On 2018-04-22 20:05 GMT
தூக்கு தண்டனையை கொள்கை அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பதாக பிருந்தா கரத் கூறினார்.
ஐதராபாத்:

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பிருந்தா கரத், இந்த அவசர சட்டம் குறித்து கூறியதாவது:-

மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நமது சட்ட புத்தகங்களில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. தூக்கு தண்டனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொள்கை அளவில் எதிர்க்கிறது. இப்போதுள்ள பிரச்சினை மரண தண்டனை பற்றியது அல்ல. கற்பழிப்பு குற்றவாளிகளை அரசாங்கமே பாதுகாக்கிறது என்பதுதான் பிரச்சினை.

பாரதீய ஜனதா கட்சியினர் பசு பாதுகாவலர்கள் என்பது நமக்கு தெரியும். இப்போது அவர்கள் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். கற்பழிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்களால் மக்கள் அதிர்ச்சியும், மிகுந்த கவலையும் அடைந்து உள்ளனர். மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் மீது அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இந்த அவசர சட்டத்தால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று நான் கருதவில்லை.

இவ்வாறு பிருந்தா கரத் கூறினார். 
Tags:    

Similar News