செய்திகள்

சிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்?

Published On 2018-04-22 06:45 GMT   |   Update On 2018-04-22 07:36 GMT
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். #DeathForChildRapists
புதுடெல்லி:

நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை நேற்று முடிவெடுத்தது.

இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்த நிலையில், அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிரந்தரமான சட்டமாக்கப்படும்.

இந்நிலையில், இந்த அவசர சட்ட திருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டால் அந்த வழக்குகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் அளிக்கப்படாது.

16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கின் தண்மைக்கேற்ப குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. #DeathForChildRapists #POCSO #TamilNews
Tags:    

Similar News