செய்திகள்

கேரளாவில் போலீஸ் காவலில் வாலிபர் பலி- 3 போலீசார் கைது

Published On 2018-04-19 12:05 GMT   |   Update On 2018-04-19 12:05 GMT
கேரள மாநிலத்தில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக 3 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வாராப்புழா பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரை வீடுபுகுந்து ஒரு கும்பல் தாக்கியது. இதில் அவமானம் அடைந்த அந்த வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி வாராப்புழா போலீசில் வியாபாரியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் இறந்துபோனார்.

வியாபாரி தற்கொலைக்கும் ஸ்ரீஜித்துக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆள் மாறாட்டத்தில் அவரை போலீசார் கைது செய்து போலீஸ்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் போலீசை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஸ்ரீஜித் மரணம் விஸ்வரூபம் எடுத்தது. இதுபற்றி விசாரணை நடத்த கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடந்தது. இந்த நிலையில் ஸ்ரீஜித் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவுக்கு போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் வாலிபர் ஸ்ரீஜித் கொலை தொடர்பாக கொச்சி ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சந்தோஷ்குமார், சுமேஷ், ஜிபின்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்ய டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். அதன்படி அந்த 3 போலீஸ்காரரர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு உள்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News