செய்திகள்

எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டும் - மன்மோகன் சிங்

Published On 2018-04-18 19:46 GMT   |   Update On 2018-04-18 19:46 GMT
தான் பிரதமராக இருந்த போது, மோடி கூறிய அறிவுரைகளை தற்போது அவர் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். #ManmohanSingh #PMModi #Kathua #Unnao

புதுடெல்லி:

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தவறு செய்தாலும் தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

அதை மாற்ற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சிறு குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகள் பெற்றோருக்கு கடும் பயத்தை ஏற்படுத்தியுள்ளன. கத்துவா, உன்னாவ் சம்பவங்கள் மூலம் இந்தியா மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதுபோன்ற சமயங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் உண்மைகளைப் பேசி சமூகத்தை வழிநடத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள். இதை விடுத்து அமைதியாக இருப்பதன் மூலம் நாட்டில் குழப்பங்களே விளையும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நான் பிரதமராக இருந்தபோது, எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி இப்போது பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த அறிவுரையை மோடி பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ வலியுறுத்தியுள்ளார்.

கத்துவா, உன்னாவ் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #PMModi #Kathua #Unnao #tamilnews
Tags:    

Similar News