செய்திகள்

சல்மான் கானுக்கு இன்று ஜாமீன் இல்லை - தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது கோர்ட்

Published On 2018-04-06 06:35 GMT   |   Update On 2018-04-06 06:46 GMT
மான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்படவில்லை. ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #salman #BlackBuckPoachingCase
ஜோத்பூர்:

அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்பட 5 பேர் மீது ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் சிங் ஆகிய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமர்வு நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றும் உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதனால்,சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது நாளைக்கே தெரிய வரும்.

ஜாமீன் வழங்கும் வரை அல்லது மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைக்கும் வரை சல்மான்கான் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.

இதேபோல் மான்வேட்டை தொடர்பான பிற வழக்குகளில் இதே சிறையில் 1998, 2006 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் 18 நாட்கள் சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #salman #BlackBuckPoachingCase

Tags:    

Similar News