செய்திகள்

லோக்பால் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே

Published On 2018-03-23 08:54 GMT   |   Update On 2018-03-23 08:54 GMT
லோக்பால் அமைக்க வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
புதுடெல்லி:

பிரபல சமூக ஆர்வலர் அன்னாஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியில் நடத்திய காலவரையற்ற உண்ணா விரதம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைப்பை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர் அந்த உண்ணாவிரதத்தை நடத்தினார்.

மத்திய அரசு உறுதி அளித்ததன் பேரில் பிறகு அவர் அந்த உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

அன்னாஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அவருக்கு வலதுகரமாக திகழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் பிறகு ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி டெல்லியில் ஆட்சியை பிடித்தார். ஆனால் அன்னாஹசாரே அதை விரும்பாததால் அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

உண்ணாவிரதத்தை நிறைவு செய்தபிறகு கடந்த 6 ஆண்டுகளாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்தார். அப்போது ஊழலை ஒழிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்படாதது பற்றி அவரிடம் பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர்.

இதையடுத்து லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அன்னாஹசாரே முடிவு செய்தார். மார்ச் 23-ந்தேதி (இன்று) எனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கப் போவதாக கடந்த மாதம் அன்னாஹசாரே அறிவித்தார். அவரது ஆதர வாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் ஆம்ஆத்மி தலைவர்கள் அன்னாஹசாரேவை தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதை ஏற்க அன்னாஹசாரே மறுத்து விட்டார்.

இன்று அவர் திட்டமிட்டப்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதற்காக ராம்லீலா மைதானத்தில் பெரிய பந்தல் அமைத்து ஏற்பாடுகள் செய் யப்பட்டு இருந்தன.

சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் மூவரும் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று என்பதால் அன்னாஹசாரே இன்று உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



பிறகு அவர் ராம்லீலா மைதானத்திற்கு வந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருடன் ஏராளமானவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

இதற்கிடையே அவரது உண்ணாவிரதத்தில் பங்கேற்க பக்கத்து மாநிலங்களில் இருந்து ரெயிலில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராம்லீலா மைதானத்தில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் தொடங்கி இருப்பதால் நாளை முதல் அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று டெல்லி போலீசார் கருதுகிறார்கள். நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அன்னாஹசாரே உடன் சுமார் 6 ஆயிரம் பேர் நிரந்தரமாக உண்ணாவிரதத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து விவசாய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

எனவே ராம்லீலா மைதானத்தை இணைக்கும் சாலைகளில் செல்வதை தவிர்க்குமாறு டெல்லி மக்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். #tamilnews

Tags:    

Similar News