செய்திகள்

கனரா வங்கியில் ரூ.68 கோடி மோசடி- சேர்மன் உள்பட 6 அதிகாரிகள் மீது வழக்கு

Published On 2018-03-20 10:12 GMT   |   Update On 2018-03-20 10:12 GMT
மத்திய அரசுக்கு சொந்தமான கனரா வங்கியில் டெல்லியை சேர்ந்த வெள்ளி நிறுவனம் ஒன்று ரூ.68 கோடியே 38 லட்சம் ஏமாற்றி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து 6 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13,500 கோடி மோசடி செய்தது அம்பலத்துக்கு வந்த பிறகு பல்வேறு வங்கிகளில் நடந்த மோசடி விவகாரங்கள் வெளியாகி வருகின்றன.

மத்திய அரசுக்கு சொந்தமான கனரா வங்கியில் ஏற்கனவே மோசடி நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து 2016-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த மோசடியில் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது? யார்- யார் சம்பந்தப்பட்டார்கள் என சி.பி.ஐ. தொடர்ந்து விசாரித்து வந்தது. இப்போது இது சம்பந்தமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், டெல்லியை சேர்ந்த வெள்ளி நிறுவனம் ஒன்று கனரா வங்கியில் ரூ.68 கோடியே 38 லட்சம் ஏமாற்றி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு அப்போதைய கனரா வங்கியின் சேர்மன் ஆர்.கே. துபே, வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் அசோக்குமார், குப்தா, கிருஷ்ணகுமார், துணை பொதுமேலாளர் முகேஷ் மகாஜன், தலைமை பொது மேலாளர் ஸ்ரீகந்தன், உதவி பொது மேலாளர் உபேந்திரா துபே ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி கமலா நகரில் உள்ள கனரா வங்கியில் இருந்து இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட கடனை திருப்பி செலுத்தாமல் அவர்கள் ஏமாற்றி உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News